விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்

கடவுள் இருக்கிறாரா?

Posted in மெஞ்ஞானம் by கணேஷ் on ஜூன் 21, 2008

ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர் தன் மாணவர்களிடம் ஒரு வித்தியாசமான கேள்வியைக் கேட்டார். “இறைவன் என்று ஒன்று உண்டா?” என்பதுதான் அந்தக்கேள்வி. அனைவரும் அமைதிகாக்க, ஒரு மாணவன் மட்டும் எழுந்து “ஆம் ஐயா… இதிலென்ன சந்தேகம்?” என்றான்.
அவர் தொடர்ந்து “உலகைப் படைத்தவர் அவர்தானா?” என்றார். மாணவர் பதிலுக்கு “ஆம்” என்றான். அவர் “கடவுள் நல்லவரா?… கெட்டவரா?…” என்று தொடர்ந்து கேட்க, “நல்லவர்… மிகவும் நல்லவர்” என்று அந்த மாணவனும் பதிலளித்தான். “கெட்டவைகள் உலகில் உண்டா?” என்றார் பேராசிரியர். மாணவனும் தொடர்ந்து “ஆம் அவைகளும் உண்டு” என்றான்.
“கடவுள்தான் கெட்டவைகளையும் சாத்தானையும் படைத்தாரா…?” என்று கேள்வி வந்தது பேராசிரியரிடமிருந்து.  “ஆம்” என்பதுதான் இதற்கும் அந்த மாணவனின் பதில். “கடவுள் கெட்டவைகளைப் படைத்தார்… கெட்டவைகள் இந்த உலகத்தில் உள்ளன! கடவுளால் படைக்கப்பட்டதால் அவரின் ஏற்பாட்டின்படிதான் அவைகள் செயல்படுகின்றன; எனவே கடவுளும் கெட்டவர்தானே…?” என்றார். இதற்கு அந்த மாணவன் தலைகுனிந்தபடி நின்றிருந்தான்.
பேராசிரியர் தொடர்ந்தார்,”கெட்டவரை எந்த நம்பிக்கையில் கடவுளை வணங்குகிறீர்கள், உங்களுக்கு அந்த நம்பிக்கை எப்படி வந்தது… எல்லாம் ஒரு மாயைதான் என்று நீ ஒப்புக்கொள்ள வேண்டுமல்லவா?”.
பேராசிரியர் முடிப்பதற்கு முன்னால் எழுந்த இன்னொரு மாணவர், “ஆசான் அவர்களே… நான் ஒரு கேள்வி உங்களைக் கேட்கலாமா?” என்றான். “கண்டிப்பாக…” என்று மாணவனை மடக்கிய இறுமாப்புடன் பேராசிரியர் கூற, தொடர்ந்தான் மாணவன், “குளிர் என்று ஒன்று உண்டா இந்த உலகத்தில்?”. “என்ன கேள்வி இது? உறுதியாகச் சொல்வேன்… உண்டென்று; உனக்குக் குளிர் அடிப்பதில்லையா?” பதில் வந்தது பேராசிரியரிடமிருந்து. அந்த மாணவனின் கேள்விக்கு அனைவரும் சிரித்தனர். “இல்லையென்று நான் சொல்வேன். இயற்பியல் விதிகளின் படி வெப்பமின்மையைத் தான் நாம் குளிர் என்கிறோம். ஒவ்வொரு ஊடகமும் வெப்பத்தைத்தான் கடத்தும்.
குறைந்த வெப்பநிலையைத் தான் குளிர்ச்சி எனச்சொல்கிறோம். ஆதாவது, 0 டிகிரி செல்சியஸ் எனப்படுவது முழுக்க வெப்பமின்மை”. அனைவரும் அமைதியானார்கள். மாணவன் மட்டும் தொடர்ந்தான், ” ஆசானே… இருட்டு என்று ஒன்று உண்டா?”. பேராசிரியர் இப்பொதும் “கண்டிப்பாக உண்டு” என்றார்.
“மறுபடியும் தவறான பதிலைச் சொல்கிறீர் ஆசானே… இருட்டு என்று ஒன்று கிடையாது, ஒளியின் இல்லாமையைத்தான் நாம் இருட்டு என்கிறோம். ஒளி என்ற ஒரு சக்தியைப் படிக்க முடியும்; ஆனால் இருட்டை… முடியவே முடியாது. ஒளியில்லாமல் போனால் இருட்டு இருக்கும், வெப்பமில்லாமல் போனால் குளிரெடுக்கும்” மாணவன் ஒரிரிரு வினாடி பேசுவதை நிறுத்தினான்.
அறையெங்கும் ஒரே அமைதி. மாணவன் தொடர்ந்தான் “அதுபோலவே, கெட்டவைகள் என்று உலகில் ஒன்று கிடையாது. கடவுளின் தன்மை எங்கெல்லாம் இல்லாமல் போகிறதோ அங்கெல்லாம் கெட்டவைகள் தோன்றும். சாத்தான்கள் என்பவை இருட்டு மற்றும் குளிர் போல; தான் எங்கே இல்லாமல் போனாலும் என்னாகும் என்பதை மனிதனுக்கு விளக்கக் கடவுளால் படைக்கப்பட்டவை. கடவுளின் தன்மைகளான அன்பும் கருணையும் மனதில் இருத்தாமல் இருந்தால் அவனின் வாழ்வில் எவ்வளவு மோசமான விளைவுகள் வரும் என்பதைக்காட்டவே கடவுள் இருட்டை, குளிரை, கெட்டவைகளை மற்றும் சாத்தானைப் படைத்தார்; இவைகள் அனைத்தும் கடவுளின் படைப்புக்கள் மற்றும் அவதாரங்களே!”. மாணவன் சொல்லி முடித்ததும் ஆசிரியர் முகம் தொங்கிப்போய் உக்கார்ந்தார்.

அந்த மாணவன்தான் அல்பர்ட் ஐன்ஸ்டீன் என்று ஒருசாரார் சொல்கிறார்கள். சொன்னது ஐன்ஸ்டீனோ இல்லையோ ஆனால், சொன்ன கருத்து கடவுளே இல்லை எனும் மனிதர்க்கு ஒரு மறுபரிசீலனை விண்ணப்பம்.

Advertisements

தமிழர்களின் நாகரீகம்!

Posted in கண்டுபிடிப்புகள் by கணேஷ் on மே 4, 2008

நாகப்பட்டினத்து அகழ்வாராய்ச்சியில் கிடைத்த கல்வெட்டுக்களில் இருந்த எழுத்துருவங்கள் சிந்து சமவெளி நாகரீகத்தின் எழுத்துருக்களை ஒத்திருப்பதை சமீபத்தில் உணர்ந்திருக்கிறார்கள். கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு. ஐராவதம் மகாதேவன் செம்பியன்கண்டியூர், மேலப்பெரும்பள்ளம் ஆகிய கிராமங்களில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் சிந்து சமவெளிநாகரீகத்தின் எழுத்துவடிவங்களைக் கொண்டிருப்பதை உறுதிசெய்துள்ளார். இவை இந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதற்குமுன் பள்ளி ஆசிரியர் திரு சண்முகநாதன் ஒரு கற்கால கோடாரியைக் கண்டெடுத்தார். அந்தக் கோடாரியில் சிந்து சமவெளி நாகரீகத்தை ஒத்திருக்கும் எழுத்துவடிவங்களைக் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் தமிழ்நாடு சிந்து சமவெளி நாகரீகத்தைத் தொடர்ந்து வந்திருப்பதை உறுதி செய்துள்ளனர்.

மேலும் கோவையிலுள்ள சூலூரில் கண்டெடுக்கப்பட்ட பழம்பெரும் கற்கால அச்சுவட்டுக்கள் தற்போது பாகிஸ்தானில் இருக்கும் ஹரப்பா நாகரீகத்தைச் சார்ந்ததாக உறுதிசெய்யப்பட்டது. தற்போது அது லண்டனில் உள்ள பிரிட்டிஷ் பொருட்காட்சியிலுள்ளது. இதன்மூலம் தமிழ் மொழியின் வரலாற்றுச்சிறப்பு சாட்சிகளுடன் உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழர்கள் அப்பொழுதே கடல்கடந்தும், பல்லாயிரம் கிலோமீட்டர் தூரம் பயணித்தும் தங்கள் பரிமாற்றங்களை வைத்துள்ளது உறுதிசெய்யப்படுகிறது.

மேலும் தெரிந்துகொள்ள : படிக்க ஹிந்து நாளிதழ்

முப்பரிமாண புவிவரைபடக்களஞ்சியம்!

Posted in கணிப்பொறி, பொது அறிவியல் by கணேஷ் on ஏப்ரல் 10, 2008

எர்த்மைன் படமாக்கும் வாகனம்

கூகுள் புவிவரைபடங்களைப் பற்றித் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. மிகப்பெரிய கலைக்களஞ்சியத் தளங்கள், புவியியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் ஆகியவை புவிவரைபடங்களைத் தனியாக உருவாக்க முடியாமல்/உருவாக்காமல் கூகுளின் வரைபடத்தைத் தான் பயன்படுத்திக் கொள்கின்றன. இவற்றில் முக்கியமானதாகக் கூறப்படுவது விக்கிமேப்பியா (www.wikimapia.org) என்ற கட்டற்ற(Open Source) கலைக்களஞ்சியம் ஆகும். அந்தளவுக்கு கூகுளின் வரைபடங்கள் பிரபலம். மேலும் முப்பரிமாண வீதி வரைபடங்களையும் வெளியிட்டு மிகப் பிரபலமாகத் திகழ்ந்து வருகிறது கூகுள்.

2006ம் ஆண்டு உருவாக்கப்பட்டு தற்போது டெக்-கிரஞ்ச் விருது பெற்றுள்ள ஒரு நிறுவனம் பற்றி உங்களுக்கு அதிகமாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வீதிகள் உள்ளிட்ட முப்பரிமாண உண்மை வரைபடங்களை மனிதர்கள் வீதிகளில் நடந்தால் பார்க்கும் கோணத்திலேயே உருவாக்கும் நோக்கத்தில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அடுக்கு அடுக்காக அசைபடக் கருவிகளைக் கொண்டு வாகனங்களை முக்கிய வீதிகளில் வலம்வர வைத்து அதன் மூலம் நேரடிக் காட்சிகளைப் படமாக்கி அவற்றில் தேவையான செய்திகளை ஏற்றி, பார்ப்பவர்களுக்கு தாமே அவ்விடங்களுக்குச் சென்று வலம்வருவது போன்ற உணர்வை ஏற்படுத்தி அவர்கள் திரும்பும் வீதிகளைக் காட்டி ஆச்சரியத்தில் மூழ்கடிக்க முயற்சி நடந்து வருகிறது. இந்த ஏற்பாட்டை உண்மையைக் கிரமப்படுத்துதல்(Indexing reality) என்று அழைக்கிறார்கள் இவர்கள்.வாகனத்தின் பக்கத்தோற்றம்

தற்போது சோதனைக்காக இந்த ஒருங்கிணைப்பு வெற்றிகரமாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சமே துல்லியமான அளவீடுகள் மற்றும் பயனரின் தேவைக்கேற்ற மாற்றங்களை உள்ளடக்கிக் கொள்ளும் தன்மை என கூறப்படுகிறது. கட்டடக் கட்டமைப்பு, நகர வசதி மேம்பாடு, சுகாதாரம், ஆயுட்காப்பீடு, அவசர சேவைகள், போக்குவரத்து, சுற்றுலா மற்றும் பலதுறைகளில் சாதனை படைக்க இருக்கும் இந்த மாதிரியான பயன்பாட்டு தொழில்நுட்பத்தை நாம் இனிவரும் காலங்களில் தவிர்க்க இயலாது என்பது அப்பட்டமான உண்மை.

www.earthmine.com என்ற தளத்தில் சென்று இதுபற்றி முழுமையாகக் காணுங்கள்.

புற்று நோய் வளர்கிறது!

Posted in பொது அறிவியல், மருத்துவம் by கணேஷ் on மார்ச் 19, 2008

புகைப்பதனால், மது அருந்துவதனால் மற்றும் சூரிய ஒளியில் அதிகநேரம் நேரடியாக இருப்பதால் புற்றுநோய் உண்டாகிறது. இது பெற்றோர் வழியாக குழந்தைகளுக்கும் பரவ வாய்ப்புள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மட்டும் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமானோர் புற்றுநோயால் இறந்ததாக 2007ம் ஆண்டு அறியப்பட்டுள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்படுவோர் அதிகமாகிக்கொண்டுள்ளது. இருந்தாலும் அதன்மூலம் இறப்போரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதன்மூலம் புற்றுநோயுடன் வாழ்பவரின் ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. என்பதை அறியலாம். இது விஞ்ஞான வளர்ச்சியின் விளைவு என்றாலும் மனிதனின் வாழ்க்கையில் உணவு மற்றும் வேறு வகையான் பழக்கங்களின் மாற்றங்களினாலும் இருக்கலாம்.

2500 ஆண்டுகள் பழமையான நகரம்!

Posted in கண்டுபிடிப்புகள், பொது அறிவியல் by கணேஷ் on பிப்ரவரி 16, 2008

ஒரிசாவில் புவனேசுவரில் 2500 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஒரு நகரம் கண்டறியப்பட்டுள்ளது. உலகில் இதுவரை பெரிய நாகரீகமாகக் கருதப்பட்ட ஏதென்ஸ் நகரத்தைவிட இது பெரியதாக இருக்கும் என்று தொல்வியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்!

ஒரிசாவின் பழமையான நாகரீகத்துக்குக்கு இது ஒரு சான்றாகக் கருதப்படுகிறது. மேலும் வரலாற்றின் ஆரம்பகாலத்தில் வாழ்ந்த நகர வாழ்க்கைக்குச் சான்றாக தொல்பொருட்களும் தடயங்களும் கிடைக்கப் பெற்றுள்ளன!

அசைபடத்தில் பார்க்க:  http://specials.rediff.com/news/2008/feb/15video2.htm

நீங்கள் அரிப்பினால் அவதிப்படுகிறவரா இதோ ஒரு நல்ல செய்தி!

டெர்மாசில்க் என்ற துணிவகைகளின் சிறப்புத்தன்மைகளை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதன்மூலம் உடலில் அரிப்பைக் குறைக்க முடியும் என்று தெரிகிறது. ஒரு கணக்கெடுப்பில் 23 விழுக்காடு மக்கள் உடல் அரிப்பினால் பாதிக்கப்படுகிறார்கள் என்று தெரிகிறது! அதில் 66 விழுக்காட்டினர் உடலின் வெப்பநிலை மாறுபாட்டால் பாதிக்கப் படுவதும் தெரியவந்துள்ளது. இந்தப்பிரச்சனைகளையெல்லாம் போக்க இந்த புதுவகைத்துணிகள் உதவியாக இருக்கும் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகைத் துணிகள் இரவுநேர உடைகள் தயாரிக்கப் பெரிதும் விரும்ப்பப்படும் என்று தெரிகிறது. உடல் வெப்பநிலையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் இந்தவகைத் துணிகளால் நாம் இனி நிம்மதியாய் உறங்க முடியும் என நம்பலாம்.

-“தி ஹிந்து” நாளேட்டிலிருந்து

Tagged with: , ,

அஜினோமோட்டோ ஆபத்து!

Posted in பொது அறிவியல், மருத்துவம் by கணேஷ் on ஜனவரி 22, 2008


மோனோசோடியம் குளுடாமேட் தெரியுமா உங்களுக்கு? தெரியாது என்று சொல்பவர்கள் யாராயினும் அஜினோமோட்டோ என்றால் உடனே தெரிந்து கொள்வார்கள். சுவை கூட்டும் தூள் என்று விளம்பரம் செய்யப்படும் அஜினமோட்டோவின் வேதியல் பெயர்தான் அது! உணவில் கலக்கப்படும் விஷம் என்றுகூடச் சொல்லலாம். MSG என்றும் சொல்லப்படுகிறது. ஒரு துளி கலந்தால் சுவை கூடும் ஆனால் வயிறு என்னவாகும் தெரியுமா? அல்சர், கேன்ஸர் போன்ற வியாதிகள் நம் வயிற்றையும் உடம்பையும் பாதிக்கும். இன்று நம்மால் தவிர்க்கமுடியாத ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் கண்டிப்பாக இந்த வியாதிகள் அஜினமோட்டோ உருவில் விற்கப்படுகின்றன. உயர்ந்த ரக உணவகங்களில் இது கலக்கப்படுவதில்லை! ஆனால் மலிவு விலைக்கடைகளில் சுவைகூட்டி மக்களைக் கவர உணவில் கலக்கப்படுகிறது. பொதுவாக சைனீஸ் உணவு வகைளான நூடுல்ஸ், சில்லி ட்ரை உணவு வகைகள் அனைத்திலும் இந்த விஷம் கலக்கப்படுகிறது. எனவே அவற்றைத் தவிர்த்தல் உடலுக்கு ஆரோக்கியத்துக்கு முக்கியம்.

செயற்கை இதயம் வேலைசெய்தது!

Posted in கண்டுபிடிப்புகள், மருத்துவம் by கணேஷ் on ஜனவரி 14, 2008

டைம்ஸ் ஆன்லைன் செய்திகளிலிருந்து: விஞ்ஞானிகள் துடிக்கும் செயற்கை இதயத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளனர். இதன்மூலம் விரைவில் செயற்கை இதயம் உருவாக்கப்படலாம் என்று தெரிகிறது! பார்க்கப்போனால் செத்தவனைக் கூட உயிர்ப்பித்துத் தந்துவிடுவார்கள் இந்த விஞ்ஞானிகள். ஒருபுறம் இந்தமாதிரியான ஆய்வுகள் ஆச்சரியத்தைக் கொடுத்தாலும் இவைகளின் முடிவை நினைக்கப் பயமாயிருக்கத்தான் செய்கிறது! விரைவில் மனிதனுக்கு மறுசுழற்சி (Recycling) நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

மிகப்பெரிய உயிரளவீட்டுத் (Biometric) தகவல்தளம் தயாராகிறது!

Posted in பொது அறிவியல் by கணேஷ் on திசெம்பர் 28, 2007


அமெரிக்கப் புலனாய்வுத்துறை (FBI) மிகப்பெரிய அளவில் உயிரளவீட்டுத் (Biometric) தகவல்ளைத் தயாரிக்க முயற்சி எடுத்து செயலிலும் இறங்கியிருக்கிறது. அது ஒரு தனிப்பட்ட மனிதனின் வெவ்வேறு பண்புகளையும் விலாவாரியாகக் கொண்டிருக்கும் எனத்தெரிகிறது. உலகளாவிய இந்தத் தகவல் சேகரிப்பு பல நாடுகளின் சட்ட ஒழுங்கு அமைப்புக்களுக்கு உதவும் எனத்தெரிகிறது.
ஒவ்வொருவரின் முக மின்னணுப் பதிப்புக்கள், கைரேகைகள், முகத் அமைப்பு, முகத்திலுள்ள கீறல்கள், கண்ணின் கருவிழி பதிவுகள், அவர்கள் எப்படி நடக்கிறார்கள் மேலும் அவர்களின் இயல்பான செயல்பாடுகள் முதலான தகவல்கள் அதில் இடம்பெறும். இதை வைத்து பெருகிவரும் வன்முறைச் செயல்களில் ஈடுபடும் தீவிரவாதிகள், சமூக விரோதிகள் ஆகியோரை உலக நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து கட்டுக்குள் கொண்டுவரலாம் என்றும் கருத்துக்கள் நிலவுகின்றன! மேலும் பல சூடான செய்திகளைப் படிக்க இங்கே செல்லுங்கள்: வாஷிங்டன் போஸ்ட்

செவ்வாய்க்குச் சனிபிடிக்குமா?

Posted in சுற்றுச்சூழல், பொது அறிவியல் by கணேஷ் on திசெம்பர் 23, 2007

2008 ஜனவரி மாதத்தின் இறுதியில் செவ்வாய்க் கிரகத்தை ஒரு எரிகல் தாக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் வானவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

அது கடந்த 1908ல் சைபீரியாவைத் தாக்கிய அளவே இருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. சைபீரியாவைத்தாக்கிய கல் மூன்று மெகா டன் வெடிமருந்துகளை ஒன்றாக வெடிக்கச் செய்த பாதிப்பை உண்டாக்கியிருந்தது. பத்து மில்லியன் மரங்களை அது கபளீகரம் செய்தது.

எப்படியோ, வியாழனுக்கும் இப்படி ஒரு விளைவு நிகழ்ந்த போது அது தாங்கிக்கொண்டது. செவ்வாய்க் கிரகத்தைவிட அது அளவில் மிகப்பெரியது. ஆனால் இதுபோன்ற விளைவைச் செவ்வாய் எப்படித் தாங்கிக் கொள்ளப்போகிறது என்றுதான் தெரியவில்லை.

செவ்வாய்க்கிரகத்துக்கு எப்படியோ சனி பிடிக்கப்போகிறது என்று தெரிகிறது.